Category Archives: காதல்

காதல் மற்றும் அதன் சமூக பங்களிப்பு பற்றிய பதிவுகள், கவிதைகள், கட்டுரைகள்

Scribbles on Akka (அக்காவை பற்றிய கிறுக்கல்கள்)

மிக புதிய வரவு கிடையாது. 2000’ம் ஆண்டே வெளிவந்த இவ்விவரனப்படம் மிக சமிபத்தில் என் கவணத்துக்கு வந்தது மன்றமய்யதின் ஒரு நன்பர் மூலமாக. 12’ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு பெண் துறவி-கவி ‘அக்கமகாதேவி’யின் வசனங்களுக்கு (Va-Cha-Nam என்றே உச்சரிக்கவும். தமிழர்கள் தான் ‘Cha’வை தொலைத்து விட்டார்கள் கன்னடர்கள் தக்க வைத்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி கொள்வோம்) இசை அமைத்து இருகிறார் என்று. இளையராஜா’வின் ஒர் படைப்பு நம் கவனதுக்கு வராமல் போய்விட்டதே என்ற ஆதங்கமும் அதை கேட்டு விட வேண்டும் என்ற ஆர்வமும் உந்தி தள்ள நீண்ட நெடிய என் தேடுதல் கொண்டு சேர்த்த இடம் ‘தில்லி’. தேடலின் மற்றும் குறுவட்டு என் கைகளில் வந்த சேர்ந்த விவரங்களை தவிர்த்து நாம் ‘அக்கா’ விடமும் ‘இளையராஜா’விடமும் தஞ்சம் அடைவோம்.

‘அக்கா’வின் வசனங்களும், ‘ராஜா’வின் இசையும் ‘மதுஸ்ரீதத்தா’வின் இயக்கமும் என இம்மூன்று படைப்பாளிகளின் ஆக சிறந்த கலை வெளிப்பாடாய் அமைந்துள்ளது இவ்விவரனப்படம். இயக்குனரும் இசைஅமைப்பாளரும் ஒருங்கே தங்கள் நோக்கங்களை தெளிவுபடுத்தி கொண்டால் மட்டுமே இது போன்ற படைப்பு சாத்தியமாகி இருக்க கூடும். மதுஸ்ரீ ராஜாவுக்கு வைத்த சவால் இதுதான் 12’ம் நூற்றாண்டின் எந்த சந்தத்திலும் அடங்காத இவ்வசனங்களை தற்க்கால தலைமுறை புரிந்துகொள்ள ஏதுவாய் ‘POP’ இசை வடிவம் கொடுக்க வேண்டும். விடுவாரா ‘ராஜா’ தன் இசை ராஜாங்கத்தில் அமர வைத்து தலைவாழை விருந்தே வைத்து விட்டார். மதுஸ்ரீ அதற்க்கு முத்தாய்ப்பாய் காட்சிகள் அமைத்து இனிப்பும் வழங்கி விருந்தை முடித்து வைக்கிறார்.

முன்னதாக இதற்க்கு வித்தாக அமைந்த ‘அக்கா’வின் சிறு வரலாற்று குறிப்பு: ‘மீரா’வை போன்றும், ‘ஆண்டாளை’ போன்றும் கடவுள் மேல் காதல் கொண்டு அவனையே துதித்து வாழ்ந்த பெண் துறவி போன்றவள் தான் ‘அக்கா’வும். ஆனால் முதலிருவரும் முறையே கண்னன் மற்றும் பெருமாள் மீது காதல் கொண்டு தங்கள் ஆசைகளை, காதலை, காமத்தை…பாடலாய் வெளிபடுத்துகிறார்கள். ‘அக்கா’ சற்றே மாறுபடுகிறார் அவள் ‘ஈசன்’ மீது காதல் கொள்கிறாள், எனவே அவள் வார்த்தைகளும் சற்று ‘கனமாக’ வந்து விழுகின்றன. சிவன் மீது காதல் கொண்ட பின் ‘ரௌத்திரம்’ தவிர்க்க முடியாது தானே.
அவள் வாழ்ந்த சமூக பின்புலமும் அவளை கோபம்மூட்டுகிற்து. அவள் மீது மோகம் கொண்ட ஒர் மன்னன் அவளை அழைத்து காம வார்த்தைகள் பேசி கவர நினைக்கிறான். அவள் அசையாத பொழுது, அடையும் நோக்கத்தில் துனிந்து புடவையை இழுத்து அவித்து மன்றாடுகிறான். நிர்வானமான அக்கா கர்ஜிக்கிறார் ‘இந்த உடல் தானே நீ விரும்புவது, இதை சிவனுக்கு அர்ப்பனித்து விட்டேன், என்ன செய்ய முடியும் உன்னால்?’ என கேள்வி எழுப்பி நிர்வான கோலத்திலேயே கடந்து செல்கிறாள். அதன் பின் அதே கோலத்தோடு ‘ஈசன்’ புகழ் பாடி சித்தர்கள் போல் அலைந்து திரிகிறாள். துகிலுரிய படும் பொழுது அவள் மேனி முழுதும் மயிர் முளைத்து ஈசன் தன் கருனையால் அவளை காத்தான் என ஒரு தொன்மம் உண்டு. ஆனால் சில வசனங்களில், அவள் செவிட்டில் அறைவது போல் தன் நிர்வான நிலையை பற்றி பேசுவதில் இருந்து அது வெறும் தொன்மம் மட்டுமே என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

இக்குறும்படம் அக்கமகாதேவியின் ஆலயத்தை சுற்றியும், அதன் வரலாறு பற்றியும், அவரின் பக்தர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளிகள் என பலரது கருத்தை பதிவு செய்கிறது. அவர்களின் வாழ்வில் ‘அக்கா’வின் பங்கு என்ன எனவும் தற்க்கால பென்னியவாதிகள் அவளின் துனிவை எப்படி முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் பல கேள்விகள் எழுப்பி பதில் தேட சொல்கிறது. இடை இடையே பாடலாய் மறுஅவதாரம் தரித்திருக்கும் அவள் வசனங்களும் நாம் வாழும் அர்த்தமற்ற வாழ்வை அசைத்து பார்கிறது.

ஆறு வசனங்கள் ஆறு விதமான உனர்வுகளை உள்ளடக்கி வெவ்வேறு பானியில் இசைக்க பட்டுள்ளது. நான் மொழி பெயர்ப்பில் தேர்ந்தவன் அல்ல ஆயினும் ‘கன்னடம்’ எனக்கு சொல்ப்ப சொல்ப்ப கொத்தான மொழியாகியமையாலும், ஆங்கில துனை எழுத்துக்கள் விவரன படத்தில் இடம் பெற்றதாலும் முயர்ச்சித்து பார்த்தேன். வசனங்களாய் இருந்திருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. ராஜா அதற்க்கு இசை வடிவம் வேறு கொடுத்து விட்டார். அந்த சந்தததிலும் அதற்க்கான பன் மீதும் தமிழை அமர வைப்பதற்க்குள் சற்று ஓய்ந்துத்தான் போனேன். சில இடங்களில் கன்னட வார்தைகளை அப்படியே உபயோகித்துள்ளேன் ஆதி தமிழ் வார்ததைகள் என்பதால்! இது இரண்டாம் வரைவு மீண்டும் வரையும் பொழுது மெறுகேறலாம் அது வரை….

kaisiri-agandava
வசனம் – கைசிறி அகண்டவா…
பாடகர்கள் – மும்பை ஜெயஸ்ரீ, நெப்பொலியன் (அருன்மொழி)
காட்சியமைப்பு: பெண்களின் அன்றாட வாழ்வை விளக்கி செல்கிறது. இரயில் நிலையத்தில் காலை துவங்கி அலுவலகம் செல்லும் ஒரு பெண் மாலை வரை சந்திக்கும் அத்தனை விஷயங்களும் காட்சிப்படுத்த்பட்டுள்ளது. பல்வேறு உழைக்கும் பெண்களையும் காட்சி படுத்துகிறது. நுற்றாண்டுகளை தாண்டி அக்காவின் வசனங்களுக்கான தேவை முடிந்து விடவில்லை பெண்களை வெறும் காம இட்சைக்கான ஒரு பொருளாய் பார்க்கும் ஆன்களுக்கு அதிர்ச்சி தரும் இப்பாடல் மற்றும் காட்சிகள்.
நடிப்பு: சீமா பிஸ்வாஸ்

பாடல்:
கைகளின் பொருளதையே களவு செய்வாய்
உடலின் பெருமைதனை களவு செய்வாயொ
பெண் உடல் போர்த்த உடையை
தரித்த நகையையெல்லாம் மொத்தம் களவு செய்வாய்
அவ்வுருவம் போர்த்த இந்நிர்வான நிலையை
மொத்தம் களவு செய்வாயோ
நல்லமல்லிநாயக தேவனே
ஒளி கொண்டு போர்த்திய மேனி வெட்கமின்றி இங்கு உளதே
பெண்னை தொடுவீரோ பெண்னை தொடுவீரோ ஒஹோ முட்டாள்களே…


வசனம் – இந்திர நீலதா…
பாடகர்கள் – மும்பை ஜெயஸ்ரீ
காட்சியமைப்பு: கோவிலில் துவங்கி, காதல் கொண்ட ஒரு பெண்னின் பல முகபாவங்களையும், உனர்வுகளையும் செதுக்கி செல்கிறது அவிஜித் முகுலின் ‘கமெரா’ . சமூக விதிகளை தகர்த்த விட்ட பின் பெண்களின் காதல் உடைந்த அனை போன்றது. அந்த காட்டாற்றின் முன் எவர் தான் நிற்க்க முடியும்? ராஜா அமைத்திருக்கும் இசை சிவன் மீதுள்ள் காதல் என்பதால் உடுக்கை கொண்டு தாள கதிகேற்ப்ப வெறி கொண்டு காதல் செய்ய சொல்கிறது.
நடிப்பு: சீமா பிஸ்வாஸ்

பாடல்:
அழகு நீலமலை மீது ஏறி கொண்டு
சந்திரக்கற்க்கள் கொண்ட செருப்பை அனிந்து கொண்டு
கொம்பை ஊதி நிற்க்கும் அரனே
என் கூம்பான மார்மேலே
உனை என்றப்பிகொள்வேன்ய்யா
அங்க வெட்க்கதோடு மனப்பெருமை விலக்கி
உனை என்று நானும் சேர்வனோ
நல்லமல்லி நாயகா…நல்லமல்லி நாயகா….

03-Onthalla Iradalla
வசனம் – ஒந்தல்ல இரடல்ல…
பாடகர்கள் – மும்பை ஜெயஸ்ரீ, நெப்பொலியன் (அருன்மொழி)
காட்சியமைப்பு: கலை வடிவத்தின் உச்சமாய் இப்பாடலும் காட்சியமைப்பும் எனக்கு படுகிறது. தேவாலயத்தில் கன்னியாஸ்த்ரியாய் சபதம் ஏற்க்கும் ஒரு பெண்னைசுற்றி சுழலுகிறது காட்சி. அருட்தந்தை பைபிளின் வாசகங்களை படித்து, ஏசுவே சத்தியமும் ஜீவனும் என கூறி, அவருக்காக என் வாழ்வும், உடலும், ஜீவனும் என சத்திய வாக்கு கோருகிறார் அப்பெண்னிடம். அவள் அதை ஏற்று கொள்ள துவங்குகிறது ராஜாவின் விளையாட்டு….ஈசனும் ஏசுவும் வேறல்ல! ஈசனை துதித்த ஒரு பாடலை ஏசுவை துதிப்பதுபோல் தேவாலய இசை கோர்வைக்குள் கொண்டு சேர்க்கிறார். ‘கிதாரும்-குழலும், பியனொவும்-மிருதங்கமும், மனியோசையும் என தன் பிறவிகளை தீர்த்து தொலைக்கிறார் ராஜா. முடிவாய் நம் வாழ்வை நீட்டித்து செல்கிறார்…இது இக்கோர்வையின் ஆக சிறந்த பாடல் என்பதில் ஐய்யம் இல்லை எனக்கு. ‘இந்து நீ கருனீசு சென்னமல்லிகார்ஜுனா’ என்ற வரிகள் என்னை போன்ற நாத்திகர்களுக்கே கண்னிர் வரவழைகிறது என்றால் ராஜாவின் இசை ஆத்திகர்களை என்ன செய்யும்?
நடிப்பு: சீமா பிஸ்வாஸ்

பாடல்:
ஒன்றல்ல இரண்டல்ல
மூன்றல்ல நான்கல்ல
என்பத்தி நாலு லட்ச யோனியிருந்து
வந்தேன் வந்தேன்..
பாராத புவிகளில் உழன்று உழன்று சுகம் சுகமன்றி….
எத்தனை ஜென்மங்களோ நான் ஏதாய் வாழ்ந்தேனோ
இன்று நீ கருனை செய் நல்லமல்லிநாயகா….

04-kananathaliya
வசனம் – காமனத்தலய கொரிது
பாடகர்கள் – மும்பை ஜெயஸ்ரீ
காட்சியமைப்பு: விசேஷமாக ஒன்றுமில்லை மிக சாதாரன காட்சிகளும் பாடலும். இப்பாடலை நாயகி மிகை அலங்காரத்துடன் ஒரு புத்தகத்தில் இருந்து படிப்பதை போல் அமைத்து உள்ளார்கள். ராஜாவின் கிதார் மற்றும் இசை கோர்வை ரசிக்க வைக்கும் என்பதில் வியப்பில்லை.
நடிப்பு: சீமா பிஸ்வாஸ்

பாடல்:
காமனின் தலையை கொரிது
காலனின் கண்னை கழிது
சோமசூரிய இருவரை இடித்து
மாவாக்கி தின்றவன் நீயே
வாணவன்விட வல்லவன் யாரு வேறே
நீ மதுகொண்ட மலரானாய்
நான் மதுவுண்ட வண்டானேன்
யமனும் நீயடா காற்றில் எறி செல்வாய்
ஸ்ரீகிரி நல்லமல்லி நாயகா

05-Enagaekkaiyya
வசனம் – எனகேக்கய்யா
பாடகர்கள் – மும்பை ஜெயஸ்ரீ, குழுவினர்
காட்சியமைப்பு: காற்றின் வெளிகளில் அலைந்து திரியும் ‘அக்கா’வின் உடல்மொழி வசனமொழி மொத்தமும் அடக்கிய ஓர் பாடல். தனியான ஒடைகளினூடே, காடுகளின் ஊடே அலையும் அக்காவை தொடர்கிறது கமெரா. அனைத்து இச்சைகளும் துறந்து, ஆடை கலைந்து கைகளில் தண்டம் தரித்து நடந்து செல்லும் அக்காவை நோக்கி நின்று தவிக்கிறது நம் மனம். இந்த சித்த நிலை அடைய தூண்டுகிறது காட்சிகள். ராஜா இசையில் பின்னனி தாளமாய் அமைத்திருக்கும் சித்த மொழி தமிழருக்கே பிடிப்படும். உலகின் அத்தனை இசை வடிவங்களையும் கோர்க்கும் அவன் சூட்சுமம் புரியாதோர்க்கு இது வெறும் பாடலாய் மட்டுமே தெரியும். அதை உலகுக்கும் உரத்து சொல்ல தவிக்கும் ராஜாவின் மனம் நாம் மட்டுமே அறிவோம். சரியான பாடல் சரியான இசை. இதை மீறி எந்த கொம்பனும் இந்த வசனதுக்கு இசை வடிவம் கொடுக்க முடியாது. பாடல் துவங்கும் முன் வரும் இசை ‘சந்தனு மொய்த்ரா’ அமைத்தது. அவர் ராஜாவின் ரசிகர் என்று அறிவோம் ஆனால் அவரால் ராஜாவின் அலைவரிசைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறார். வெறும் ‘filling’ மட்டுமே செய்கிறார் காட்சிகளுக்கு.
நடிப்பு: சாபித்ரி ஹெய்ஸ்னாம்

பாடல்:
எனக்கேன்ய்யா எனக்கேன்ய்யா
சாகும் பிரபஞ்சத்தின் பொம்மையோ
மாயையின் மலபாண்டம்…
மலபாண்டம் எனக்கேன்ய்யா
ஆசைகளின் உயர் நிலையில்
நீர் பொங்க உடைந்திடுமே
ஒழுகிடும் இவ்வில்லம் எனக்கேன்ய்யா
விரலின் கசக்குதலில் அழுகும் பழமிதுவே
எனக்கேன்ய்யா எனக்கேன்ய்யா….


வசனம் – வெட்டது மேலே மனைய மாடி
பாடகர்கள் – மும்பை ஜெயஸ்ரீ
காட்சியமைப்பு: சிறு பெண் குழந்தைகள் வசனங்கள் உதிர்க்க கடலோரத்தில் துவங்கும் காட்சி, மறைந்து இவ்விவரனபடத்தில் பங்கு கொண்டோரின் பெயர் தாங்கி தலைப்பு நோக்கி நகர்கிறது. இருண்ட திரையில் மிதக்கும் பெயர்களினூடே அக்காவின் வசனங்களும் ராஜாவின் இசையும் ‘அச்சம் தவிர்’ என கூறி செல்கிறது. நிறைவான மனதோடு நாமும் வாழ்வு நொக்கி புது புரிதலோடு திரும்புகிறோம்…

பாடல்:
சாவில்லாதாய்
அழுகல் இல்லாதாய்
இடம் இல்லாதாய்
கனவில்லாதாய்
வெளியில்லாதாய்
உருவம் இல்லாதாய்
பிறவி இல்லாதாய்
பயம் இல்லாதாய்
அம்மா அதே என் காதலம்மா

மலைகளின் மேலே மனையை அமைத்து
மிருகத்தை அஞ்சுவதேன்னைய்யா
சமுத்தரத்தின் கரைகளில் மனையை அமைத்து
அலைகளை கண்டு அஞ்சுவதேன்னைய்யா
சந்தை நடுவினில் மனையை அமைத்து
சப்தங்கள் கேட்டு அஞ்சுவதேன்னைய்யா
இந்த உலகில் பிறந்த பிறகு….
பல நிலைகளும் வந்திடும்
மனதிலே கோபம் வந்து ஆள்வதேன்
அமைதி கொள்ளவே வேண்டும்
நல்லமல்லி நாயகா….

இந்த தொகுப்பை கேட்ட பின்பு ‘திருவாசகத்திற்க்கு’ இசை அமைக்க எங்கிருந்து உந்துதல் வந்தது என புரிந்து கொள்ள முடிகிறது. சரியாய் 6 பாடல்கள் இரண்டிலும். சற்றெரகுறைய அதே கருத்தை முன் வைக்கும் பாடல்கள். முக்கியமாய் அவை தொகுப்பில் இடம் பெறும் வரிசை. கடைசி பாடல் ‘அச்சம்’ பற்றி பேசுகிறது. அதற்க்கு முந்திய பாடலல் ‘பற்றற’ வாழ்வை பேசுகிறது. இப்படியாக இரண்டு தொகுப்பிலும் ஒற்றுமைகள் பலவுண்டு. ஆயினும் ராஜா இரண்டிர்க்கும் வெவ்வெறு இசை வடிவம் கொடுத்து நம்மை ஆட்கொள்கிறார்.

DVD/VCD கிடைக்கும் இடம்:
Magic Lantern Foundation
J 1881 Basement, Chittaranjan Park, New Delhi 110019
Ph: +91 11 41605239, 26273244
Email: underconstruction@magiclanternfoundation.org / magiclantern.foundation@gmail.com / magiclf@vsnl.com
Web: http://www.magiclanternfoundation.org

Advertisements