Category Archives: சினிமாவின் அரசியல்

திரைப்படங்களின் உள்ளே புதைந்திருக்கும் அரசியலை இனம் காணும் முயற்சி

கல்லூரியின் கதை

wrtier jayamohanதிருக்குறளில் ஆகச்சிறந்த கவிதை எது என்று நான் ஒருமுறை மறைந்த பேராசிரியர்ஜேசுதாசனிடம் கேட்டேன். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுகஉலகியற்றியான்’ என்ற குறள்தான் என்றார்.பத்து வருடங்களுக்கு முன்பு, இளைஞனான எனக்கு அது விந்தையாக இருந்தது. அருமையானஅணிகளும் சொல்லாட்சிகளும் உள்ள எத்தனையோ குறள்கள் இருக்க, உள்ளர்த்தங்களேஇல்லாத நேரடியான இந்த உணர்ச்சிவெளிப்பாட்டை ஏன் தெரிவுசெய்தார் பேராசிரியர்என்ற எண்ணம் ஏற்பட்டது.ஆனால் பேராசிரியர் சொன்னார் .”கவிஞனின் மிக உன்னத வெளிப்பாடு என்பதுஅறச்சீற்றம் அவனை மீறி வெளிப்படும் நிலைதான். இந்தக் கவிதையை கொஞ்சம் நிதானமாகசிந்தனை செய்திருந்தால் வள்ளுவரே முட்டாள்தனமாக உணர்ந்திருப்பார். உலகைஉருவாக்கியவனை அவனால் உருவாக்கப்பட்டவனே அழிந்துபோகும்படி சாபம் போடுவதாவது….ஆனால் அந்த உணர்வெழுச்சி உண்மையானது. தமிழில் வெளிப்பட்ட அறச்சீற்றங்களின்உச்சமே இக்குறள்தான். ஆகவே இது மகத்தான கவிதை…”
பாலாஜி சக்திவேல்லின் ‘கல்லூரி’ கேளிக்கையை மட்டுமே அடிப்படை இலக்காகக் கொண்டதமிழ்த் திரையுலகில் வெளிப்பட்டிருக்கும் ஆழமான அறச்சீற்றத்தின் பதிவு.ஆகவேதான் இந்த எளிமையான, அடக்கமான, படம் எனக்கு ஒரு காவியமாகவே தெரிகிறது.மேலான கலை என்பது ஒருபோதும் உத்தி சார்ந்த அலட்டல் அல்ல, செயற்கையானஎடுப்புகளும் அல்ல. அது அடிபட்டவனின் வலி முனகல் போலவோ ஆனந்தக் கண்ணீரின்விம்மல் போலவோ இயல்பாக, தன்னிச்சையாக வெளிப்படுவது.‘கல்லூரி’ இன்றுவரை நம் திரையுலகம் முன்வைத்துவந்த கல்லூரிகளில் இருந்து அதன்யதார்த்தம் காரணமாகவே வேறுபடுகிறது. உயர்தர உடையணிந்த விடலைகள் பளபளக்கும்இருசக்கர வண்டிகளை சாய்த்துவைத்து உலகையே நக்கல்செய்து திரியும் கல்லூரிகளையேநாம் கண்டிருக்கிறோம். காதல் அல்லாமல் வேறு விஷயமே நிகழாத இடங்கள் அவை. கல்உடைப்பவர்களின், பீடி சுற்றுபவர்களின், ஆட்டோ ஓட்டுபவர்களின்அரைப்பட்டினிப்பிள்ளைகள் படிக்கும் ஒரு கல்லூரி என்பது முப்பது வருடங்களுக்குமுன்னரே தமிழ்நாட்டில் ஒரு அன்றாட யதார்த்தமாக ஆகிவிட்டாலும் கூட இப்போதுதான்அது திரையில் முகம் காட்டுகிறது.
அந்தப் பிள்ளைகள் அவர்களின் துயரங்களால், ஓயாத போராட்டத்தால் ஒன்றாகச்சேர்வதும்அவர்கள் நடுவே உருவாகும் ஆழமான நட்பும் மிகுந்த நுட்பத்துடன்காட்சிப்பதிவாகியுள்ளது இந்த திரைப்படத்தில். அவர்கள் ஒருவரை ஒருவர்‘கலாய்ப்பதும்’ அவர்களின் ஊடல்களும் திரைப்படம் என்ற கலையின் அனைத்துவல்லமைகளும் வெளிப்பட சித்தரிக்கப்பட்டிருந்தமையால் உண்மையான வாழ்க்கையை கண்எதிரே பார்த்த பிரமிப்பும் நிறைவும் ஏற்படுகிறது.

கதாபாத்திரங்களுக்கு ஏற்ப முகங்களைத் தேர்வுசெய்ததில்தான் இப்படத்தின்முதல்பெருவெற்றி நிகழ்ந்திருக்கிறது. முத்து, ஆதிலெட்சுமி, கயல் போன்றகதாபாத்திரங்கள் மிக மிக யதார்த்தமாக இருக்கின்றன. படத்தில் ஒவ்வாமை அளிக்கும்ஒரு முகம் கூட வெளிப்படவில்லை. உழைத்து வாழும் எளிய முகங்கள் தொடர்ந்துவந்தபடியே இருப்பதை பரவசத்துடன் பார்த்தபோது இந்த சாதாரணமான விஷயத்தை எண்ணிஏங்கும்படி இருக்கிறதே தமிழ் திரையுலகு என்ற கசப்பும் ஏற்பட்டது. உதாரணமாககயலின் அப்பாவாக வருபவரின் அந்த முகம்! உழைத்து குடும்பத்தைகரையேற்றத்துடிக்கும் பாசமுள்ள ஒரு தந்தையின் அந்த இனிய சிரிப்பு! அதேபோலசலீமாவாக வரும் அந்தப்பெண். தென்தமிழ்நாட்டு மரைக்காயர் முகங்களுக்கே உரியகூறுகள் துலங்குகின்றன அதில்.
நடிப்பைக் கொண்டுவருவதிலும் பாலாஜி சக்திவேல் பெருவெற்றி பெற்றிருக்கிறார்.கல்லூரி முதல்வராக நடிப்பவரின் முகபாவனைகள் தவிர அனைத்து வெளிப்பாடுகளுமே மிகமிகக் கச்சிதமாக அமைந்துள்ளன. ஒரு பொம்மையாக மட்டுமே வரமுடியும் எனஎதிர்பார்க்கவைத்த கதாநாயகி கூட அற்புதமான மெய்ப்பாடுகளை வழங்கி மனம்நெகிழச்செய்கிறார்.
நமது கிராமப்புற கல்வி நிலையங்களில் இன்றுள்ள உண்மையான அடிப்படைச் சிக்கலேபடத்தின் மையக்கருவாகியுள்ளது.

கட்டுப்பெட்டித்தனமான நம் சமூகம் ஆணும் பெண்ணும்பழகுவதை அனுமதிக்காது. ஆனால் கல்வி நிறுவனங்களில் அதற்கான வாய்ப்புஏற்படுகிறது. ஆனால் அங்கே நட்பும் பாலியல் கவற்சியும் ஒன்றுடன் ஒன்று கலந்துஇனம்பிரிக்க முடியாதபடி சிடுக்குபட்டிருக்கின்றன. கல்லூரிகளில் நிகழும்பெண்சீண்டல்கள் அடிப்படையில் இச்சந்தர்ப்பத்தை எப்படி எதிர்கொள்வது என்றுதெரியாத இளைஞர்களின் வெளிப்பாடுகள். நம் திரைப்படங்கள் தொடர்ந்து பெண்ணைச்சீண்டி மட்டப்படுத்தும் கதாநாயகர்களை முன்வைத்து அவர்களுக்கு வழிகாட்டுகின்றன.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் மட்டுமே நிகழ முடியும் என்ற எண்ணத்தைமீண்டும் மீண்டும் அவை வலியுறுத்துகின்றன.
அதை மீறி இயல்பான நட்புடன் ஆணும் பெண்ணும் பழக முடியுமா என இளம் உள்ளங்கள் கனவுகாண்கின்றன. அவர்களை தடுப்பது இரு வல்லமைகள். ஒன்று எப்போதும் ஒழுக்கக்கட்டுப்பாட்டின் குண்டாந்தடியுடன் பார்க்கும் சமூகத்தின் கண்கள். இன்னொன்றுஅவர்களுக்குள்ளேயே எழும் இயல்பான பாலியல் இச்சை. அவ்விரண்டாலும் கடுமையானமனக்குழப்பத்துக்கும் குற்றவுணர்வுக்கும் ஆளாகிறார்கள் அவர்கள். நம்குழந்தைகளின் வளர்இளமைப்பருவத்தில் அவர்களை சுழற்றியடிக்கும் மையச்சிக்கலாக இதுவிளங்குகிறது

மிக நேர்மையுடனும் கவித்துவத்துடனும் அதை கலையாக்கியிருக்கிறார் பாலாஜிசக்திவேல். அவ்விளைஞர் குழுவுக்குள் உள்ள இயல்பான நட்பும் அதில் இருவர் அவர்களைமீறி காதல் கொள்ளும்போது ஏற்படும் உக்கிரமான குற்றவுணர்வும் அதனுடன் அவர்கள்நிகழ்த்தும் போராட்டமும் உணர்ச்சிகரமான தருணங்கள் மூலம் வெளிப்படுகின்றன.படத்தில் இளைஞர்களின் போராட்டம் என்பது எந்த புறச்சக்தியுடனும் அல்ல தங்கள்அகமன அலைகளுடன் மட்டுமே என்பது இப்படத்தின் மிக நுட்பமான சிறப்பம்சம்.

கடைசியில் தருமபுரி பேருந்து எரிப்பில் உச்சம் கொண்டு முடிகிறது படம்.துளித்துளியாக ஏழை மக்கள் உருவாக்கியெடுத்த கனவுகளை மூர்க்கமாகஅழித்துச்செல்கிறது வன்முறை அரசியலின் ஈவிரக்கமற்ற கை. ”கெடுக!” எனமூண்டெழும் ஓர் அடிவயிற்று ஆவேசம் தொனிக்க படமாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகளேதமிழ்திரையுலகின் மறக்கமுடியாத படங்களுள் ஒன்றாக இதை நிலைநிறுத்துகின்றன.

எத்தனையோ மௌன அர்த்தங்கள் கோண்டது இக்காட்சி. சிராய்ப்புகளுடனும் கண்ணிருடனும்கனவுகளுடனும் அவ்விளநெஞ்சங்கள் நாளை வெளிச்சென்று எதிர்கொள்ள தங்களைதயாரித்தபடி இருக்கும் புறவுலகம் எப்படிப்பட்டது? அவர்கள் பேணும் மலரசைவுபோன்றமெல்லிய உணர்வுகளுக்கும் தவிப்புகளுக்கும் அங்கு என்ன இடம்? அக்கனவுகளை ஈசல்சிறகுகள் போல உதிர்த்துவிட்டுத்தான் குண்டாந்தடிகளுடன் அலையும் மனிதர்களின்சூழலுக்கு அவர்கள் வந்துசேர வேண்டுமா?

‘கல்லூரி’ உண்மையில் பலநூறு ஏழை உழைப்பாளிகளின் எதிர்காலம் குறித்த கனவுகளின்கூடமாக இந்நாவலில் காட்டப்பட்டுள்ளது. தங்கையை கல் உடைக்க அனுப்பி அண்ணாவைபடிக்க அனுப்பும் கல் உடைப்பவனின் கனவு. ஊதுவத்தி சுற்றி அக்காவை படிக்கஅனுப்பும் தங்கைகளின் கனவு. அவர்கள் படிக்கும் அந்த வரலாறு இளங்கலை அவர்களுக்குஎன்ன அளிக்கப்போகிறது? குண்டாந்தடிகளும் பெட்ரோலுமாக அலையும் அரசியல்வாதிகளிடம்அல்லவா இருக்கிறது அவர்களின் எதிர்காலம்?

செழியனின் ஒளிப்பதிவு இயல்பான ஒளியில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தைஉருவாக்கும் அளவுக்கு அழகும் இயல்பான தன்மையும் உடையதாக இருக்கிறது. இயற்கையானமழை இருளை படம்பிடித்திருப்பதும் சரி, கல் குவாரி சித்தரிப்பில் ஒளிப்பதிவுக்கோணங்களும் சரி நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் உச்ச்சகட்ட காட்சி அதற்குதேவையான உழைப்பையும் பொருட்செலவையும் அளிக்காமல் எடுக்கப்பட்டது போலப் படுகிறது.

சென்ற சில மாதங்களாக ஆழமான மன இக்கட்டில் இருந்தேன். என் நுண்ணுணர்வைஅவமானப்படுத்தி எரிச்சலூட்டிய சில படங்கள், ‘பருத்தி வீரன்’ ‘கற்றது தமிழ்’போன்றவை, ஊடகங்களால் பெரும் படங்களாக முன்வைக்கப்பட்டமைதான் காரணம். ஹாலிவுட்படங்களை நோக்கி பிரதிசெய்த ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு உத்திகளைஎந்தவிதமான கலைநுட்பமும் இல்லாமல் அசட்டுத்தனமான மிகையுடன் தோன்றியவிதமெல்லாம்கையாண்டு எடுக்கப்பட்ட இலக்கற்ற முதிரா முயற்சிகள் அவை. அவற்றின்இயக்குநர்களின் அசட்டு ஆணவமும் கலை மொண்ணைத்தனமும் மட்டுமே வெளிப்படுபவை. அவைபோன்ற படங்கள் கொண்டாடப்படும் ஒரு சூழல் காலப்போக்கில் தன் கலைமனத்தையே இழக்கநேரும் என்றே நான் அஞ்சினேன்.

நல்ல படைப்பு அடிப்படையில் உண்மையான மனஎழுச்சிகளை ஒட்டி உருவாவது. எத்தனைதொழில்நுட்பச் சரிவுகள் இருந்தாலும் ஆத்மா பங்கப்படாதது. அவ்வகைப்பட்ட படம்‘கல்லூரி’. எளிமையையே வலிமையாகக் கொண்டது. செயற்கையான மன வக்கிரங்களுக்குப்பதிலாக நம்மைச்சுற்றி வாழும் வாழ்க்கையை நம்மைப் பார்கக்ச்செய்வது. ஒரு எளியசமூகம் தன்னைத்தானே பார்க்க, தன் வலிகளை தானே சொல்லிக்கொள்ள , முயல்வதன் விளைவுஇது வெற்றிபெற்றாக வேண்டியவை இவ்வகைப்பட படங்களே. இவற்றின் வெற்றியே நம்மைப்பற்றியபெருமிதத்துடன் நாம் மேலும் எதிர்பாக்கச் செய்யும். குறைகள் இருக்கின்றன,அவற்றை இப்படம் நூறுநாள் ஓடும்போது அம்மேடையிலேயே அலசவேண்டும்.
-ஜெயமோகன்

முன் குறிப்பு: படம் பர்க்கவில்லைஎனினும் இந்த விமர்சனம் படம் பார்ப்பதற்கான ஆவலை தூண்டியிருக்கும் அதே நேரம், விமரசனத்தின் மீதான எதிர்வினையாக மட்டுமே இதை எழுதுகிறேன்.

தங்களின் அறசீற்றம் குறித்த பதிவினை கண்டு உள்ளம் உவகை கொள்கின்றது. இந்த அறசீற்றத்தை இவ்வளவு நாட்களாய் எங்கு ஒளித்து அல்லது ஒழித்து வைத்திருந்தீர்கள் என்று தெரியாமல் மனம் சற்றே தடுமாறுகிறது. ஆயினும் நாம் விஷயத்திற்கு வருவோம்!
எந்த வித படாடோபங்களும் அன்றி எளிமையாய் இருப்பதால் மட்டுமே திரை படங்கள் காவிய நிலையை எட்டி விடும் ஆயின் அப்படிப்பட்ட நிறைய படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் உங்கள் உணர்வெழுச்சி இந்த எளிமையினால் அல்ல படம் எடுத்து வைக்கும் அரசியல் விமர்சனம் மூலமாகவே நீங்கள் பெற்று கொண்டீர்கள் என கோடிட்டு காட்டி விட்டீர்கள். எனவே படம் காட்டும் எளிமையான வண்ணங்களுக்குள் நுழையாமல் நேரடியாய் ‘கல்லூரி’ நம் முகம் நோக்கி வீசியெறியும் கேள்விகளை எதிர் கொள்வோம்.
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம் மீதான தார்மிக ஆவேசமே திரைக்கதையின் நோக்கம் என்றான பின் அம்முடிவை, அல்லது அதை பற்றிய விவாத தளங்களுக்கு நம்மை இட்டு செல்வதற்கு வேறு வழியே இல்லையா? அதை 8 ஆண்டுகளுக்கு பின்னால் ஒரு திரைப்படம் எடுத்து தான் நமக்கு ‘சொரணை’ வரவழைக்க வேண்டுமா? அதை அவர் ‘சாமுராய்’ எடுத்த போதே ஒரு குறும்படமாக எடுத்து வீதிதோறும் அரங்கேற்றியிருக்கலாமே? அல்லது மாணவர்களை ஒரு குழுவாக்கி இவ்வரசியல் வாதிகளுக்கு எதிராக ஒரு கண்டன ஆர்பாட்டமாவது நிகழ்த்தி இருக்கலாமே? இதை எல்லாம் விட்டு விட்டு இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் இதை ஒரு திரை படமாக எடுத்து தமிழ் திரை வரலாற்றில் பதிவு செய்கிறார் என்றால், அதில் உள்ள வியாபார உத்திகளையும் உள் நோக்கங்களையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது!
திரை வியாபாரத்தின் உச்ச பட்ச பிதாமகர்களான மணிரத்னம், ஷங்கர் வகையறாக்களின் ‘பட்ஜெட்’ குறைக்கப்பட்டு எளிமையான வடிவம் தான் பாலாஜி சக்திவேல் போன்றோர். சமூகத்தில் நிகழ்ந்த அல்ல நிகழ்ந்து கொண்டிருக்கும் எதோ ஒரு பிரச்சனையை எடுத்து வைத்து கொண்டு அதை சுற்றி ஒரு கதை பின்னி, பிரச்சனையின் வீர்யத்தை நீர்க்க செய்து கடைசி காட்சியில் நீங்கள் குடுத்த காசுக்கு இரண்டு சொட்டு கண்ணீரை உவர்ந்து விட்டு செல்லுங்கள் அல்லது பிரச்சனைகளை தீர்க்க ஒரு அதி மனிதன் இருக்கிறான், அவனை பற்றிய கனவுகளை எடுத்து செல்லுங்கள் என நம் காலில் விழாத குறையாய் நம்மிடம் கதறுபவர்கள் இவர்கள். ஆயினும் இந்த படம் உங்கள் ஆவேசத்தை கிளறி விட்டுஇருக்கிறது! சரி என்ன செய்தீர்கள்? 100 வது நாள் வரை காத்திருந்த மேலும் இதை பற்றி பேசலாம் என்று முடிவு எடுத்து இருகிறீர்கள்! திரை படம் என்பதின் வீச்சு அவ்வளவே. சரியான அரசியல் பாடங்கள் மற்றும் அறம் சார்ந்த கேள்விகளுக்கு திரை அரங்கின் வெளியே தான் விடை தேட வேண்டி இருக்கும், தேடுவோம்!
மிக வக்கிரமான குருரமான ஒரு சம்பவமாய் நம் முன் நிகழ்ந்தேறிவிட்ட ஒரு சம்பவத்தின் வீச்சை நேரடியாய் நாம் உணர செய்த சன் டிவி’க்கு நன்றிகள் தெரிவிக்க நா விழைந்திடினும், இக்காட்சி மற்றும் பதிப்பு ஊடகங்களுக்கு இந்த சம்பவத்தை ஒரு ‘sensational’ விஷயமாய் மாற்றி தங்கள் வியாபாரத்தை பெருக்கி கொள்ள ஒரு வாய்ப்பாய் மட்டுமே கருதியிருந்தன என்பதை நினைக்கையில் உள்ளம் கோப பட தான் செய்கிறது. ஆயினும் இக்கோபம் நாம் வாழும் சமூக சூழலை நோக்கும் பொழுது, சுயவிமர்சனம் அன்றி இப்பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க போவதில்லை என்பதை அறியும் போதோ, அல்லது நமது அடுத்த வேலை சோற்றுக்கு எந்த பங்கமும் வந்து விட கூடாது என நினைக்கும் போதோ தன்னால் தனித்து விடும். நித்தியமாய் கோபம் கொண்டிருப்பது தான் இச்சமூகத்தை மாற்றி அமைக்க கூடிய ஒற்றை வழி. ஆனால் அப்படியெல்லாம் கோபம் கொள்ள கூடாது என நீங்கள் உங்கள் ‘பின் தொடரும் நிழலில் குரல்’ மூலமாக ஏற்கனவே கோபம் கொண்ட சமூகத்திற்கு சாவு மணி அடித்து விட்டீர்கள். சமூகத்தில் வாழும் மனிதனின் பனி அல்லது கடமை சமூக அவலங்களுக்கு தீர்வு தேடுவதில் அல்ல அவ்வவலங்களை கண்டு உள்ளம் குமுறி அழுது ஆற்றாமையால் என்ன செய்ய என கைவிரிப்பதில் தான் உள்ளது, அல்லது கண நேரம் எட்டி பார்க்கும் கண்ணீர் கொண்டு நம் மனசாட்சியை கழுவி கொள்வதில் உள்ளது, சற்று அதிகமாய் போனால் உங்களை போல் காத்திருந்து கோபம் தெறிக்க விவாதம் நடத்தி விட்டால் போகிறது. இது தான் நாம் காணும் சமூகம்.
உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளாய் கருத படும் மக்கள் கூட்டத்தில் இருந்தே நடுத்தர நகர கல்லூரிகளுக்கு செல்லும் பிள்ளைகளும், அதே வர்கத்தின் உதிரி பாட்டாளிகளில் இருந்து முளைத்த அரசியல் அடிவருடிகள், அடியாட்கள் எல்லோரும் உருவாகி வருகிறார்கள். ஒரு வர்க்கம் என்ற வகையில் இருவரும் ஒன்றாகவே அடையாளம் கான படுவார்கள், வர்க்க கோபுரத்தின் உச்சியை நோக்கி நகர்வதற்கு இருவரும் வெவ்வேறு வழிகளை கை ஆள்கிறார்கள். ஆயின் இந்த முரண்பாட்டை நீக்குவதற்கு அரசியல் பாடம் பயில வேண்டும். இந்த அடியாட்களை நோக்கி போர் கரம் உயர்த்த வேண்டாம் என மாணவர்களை யார் தடுத்தது? அல்லது மக்களை தான் யார் தடுத்தது?
பதினெட்டு வயதில் ஒட்டு போடும் உரிமை வந்து விடுகிற பொழுது சற்றேரத்தாழ அதே வயதில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சற்றும் சமூக விழிபுனர்வற்று தான்தோன்றியாய் திரிந்து, நட்பில் லயித்து, காதலில் களித்து சமூகத்தின் மூர்கங்கள் தங்களை தாக்கும் பொழுது மட்டும் எதிர் கேள்வி கேட்பதில் என்ன நியாயம் உள்ளது. இதே மாணவர்கள் தானே படித்து முடித்த பின் அரசாங்க அதிகாரியாய், பாட்டாளியாய், மந்திரியாய் மற்றும் சமூகத்தில் உலவும் ஏனையோராய் உருவாகிறான். இதே மாணவர்கள் தானே ஆசிரியர் கண்டித்தால், பேருந்து பயணத்தில் நடத்துனர் கண்டித்தால் உடனே மறியல் செய்வதும், பேருந்தை கொளுத்துவதும் என வலம் வருகிறார்கள்! அப்படியல்லாமல் அப்பாவிகளை பற்றி மட்டுமே நாம் கவலை கொள்கிறோம் எனில், அப்பாவிகள் என்பவர் யார்? தங்களை சுற்றி நடக்கும் அவலங்களை கண்டும் காணாமல் இருந்து, தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்போரா? அப்படி வாழ்வோரால் சமூகத்திர்க்குதான் என்ன பயன்? அவர்கள் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன? அதற்கு ஏன் நாம் கண்ணீர் சிந்த வேண்டும்? பல்வேறு திரை படங்களில் மாணவர் சக்தி… மாணவர் சக்தி… என முழங்குகிரார்களே! திரையை விட்டு அவர்கள் தெருவில் இறங்கியிருகிரார்களா? இறங்கினார்கள் 1965ல், அதன் பின் ஒரு நீண்ட நித்திரையில் துயில் கொண்டு இருக்கிறது மாணவ சமூகம். இது அறியாத பருவமோ அல்லது தெரியாமல் நடக்குக் தவறோ அல்ல. ரஜினி, விஜய் அல்லது அஜித் இவர்கள் பின்னே அணிவகுக்கவும் அவர்கள் புகழ் பாடவும், அவர்களை எவனாவது இழித்து கூறினால் எதிர்த்து சண்டை போடவும் தயாராகும் இவர்கள் ஏன் தங்கள் சமூகத்தை வழி நடத்தும் அரசியல் பயில கூடாது? அதில் பங்கேற்று நாட்டை திருத்த முன் வர கூடாது? பேருந்தை கொழுத்திய கயவர்களை ஏன் இவர்களே ஒரு படையை நிறுவி கொன்று ஒழித்திருக்க கூடாது?
இதை எல்லாம் பேசவும் கூடாது, பேசினால் புரட்சி அல்லது தீவிரவாத முத்திரை குத்தி விடுவார்கள்! எனவே ஜெயமோகன் காட்டும் சமூக சித்திரத்தில் நின்று கொண்டு விவாதம் மட்டுமே நடத்துவதற்கு தான் நமக்கு விதிக்கப்பட்டுஇருக்கிறது. மாறாக செங்கொடி உயரும் பொழுது ‘நிழலின்’ குரவலையை நெறிப்பார்கள் மக்கள். அப்படி ஒரு தருணம் வராமல் போனாலும் அதை பற்றிய கனவையாவது விதைப்போம். எளிய மக்களின் தோழன் போல் நடித்து கொண்டே அவர்களை அடிமையாய் வைத்திருக்கும் கயவர்களை இனம் கான உதவும்.

மற்றபடி….
பிரச்சனைகளை குறித்து தீர்வு தேடாமல் அதன் வலிகளை சுமந்து கொண்டு கால காலமாய் விடியல் நோக்கி காத்திருக்கும் சமூகத்தை அரசியல் படுத்தாமல், போராட சொல்லாமல், சோகங்களில் சுகம் கான சொல்லுகிறது ‘கல்லூரி’ அதிமனிதனின் வரவை எதிர்பார்க்க சொல்லுகிறது ‘அந்நியன்’. இரண்டுமே தீர்வு அல்ல ‘கொலைவாளினை எடடா’ என சொல்லுகிறது ‘கற்றது தமிழ்’.
எடுத்து கொண்ட கருத்துக்கு நேர்மையாய் இருப்பதில் ‘கற்றது தமிழ்’, ‘கலலூரியை’ விஞ்சி நிற்கிறது. படம் முழுதும் ‘கலாய்ப்பதும்’ ‘நட்பு கொள்வதும்’ ‘காதல் கொள்வதும்’ பின் கடைசி 10 நிமிடங்களில் அதை நேர்மாறாய் கலைத்து போட்டு பரிதாபம் தேடுவதும் என்றல்லாமல், படைப்பாளியின் கர்வமும் திமிரும் படம் முழுக்க விரவி கிடந்தாலும், சமூகம் இரண்டாய் பிளந்து கிடப்பதும், பிளவின் ஆழம் கூடி கொண்டே செல்வதுவும் படம் நெடுக அலச படுகிறது, விவாதிக்க படுகிறது. அது தமிழ் மனங்களிலும் வலை தளங்களிலும் தோற்றுவித்துஇருக்கும் விவாதங்களை பாரத்தால் தெரியும் திரை’யின் வெளியே படம் தன் நீட்சியை பெற்று இருக்கிறது என்பது. அதற்காகவே இயக்குனர் ‘ராம்’ நம் பாராட்டுகுரியவாகிறார். ஒரு அரசியல் வகை பட்ட அல்லது அறசீற்றத்தை தோற்றுவிக்க கூடிய படம் இப்படித்தான் இருக்க வேண்டும். அல்லது வெளியாகி ஓடி கொண்டிருக்கும் ‘எவனோ ஒருவன்’ பாருங்கள். இவ்விரு படங்களும் ‘நாயகர்’ மையம் கொண்ட படங்கள் எனினும் அவை தோற்றுவிக்கும் கோபத்தில் சமூக கோபம் உள்ளது. இந்த படங்கள் மட்டும் சமூகத்தை புரட்டி போட்டு விடுமா என நீங்கள் கேடபீர்கள்! ‘அல்ல’ அதை மக்கள் தான் செய்ய வேண்டும், ஆனால் எடுத்து கொண்டு கருத்துக்கு நேர்மையாய் இருப்பதில் இந்த படங்கள் வெற்றி கண்டுள்ளன.
‘பருத்திவீரன்’ எந்த கருத்தும் சொல்ல வில்லை சண்டியராய் திரியும் ஒரு மனிதனின் பரிதாப முடிவையும் ‘பாலியல் பலாத்காரம்’ எவ்வளவு கொடுரமானது (அது அவர் நோக்கம் இல்லை எனினும்) என்பதை உணர்த்துகிறது, அவ்வளவே! இதில் நீங்கள் அவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும் ஆனால் ஒரு கதை என்ற வகையில் எந்த தகிடுததமும் இல்லாமல் சீராய் பயணித்து நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி அழ வைக்கிறது. இதில் நுண்ணுணர்வை அவமானப்படுத்தி எரிச்சலூட்டிய கணம் எது என எனக்கு புரிய வில்லை. வன்புணர்ச்சி உங்களுக்கு பிடித்த செயலாக இருப்பின் படத்தில் ஒலித்த ஓலம் அவ்வாறு உங்களுக்கு ஒரு தோற்றத்தை கொடுத்து இருக்கலாம். மன்னித்து விடுங்கள்! பாவம் அறியாமையால் தவறிழைத்துவிட்டார்.
பின் குறிப்பு:
‘கல்லூரி’ பற்றிய ஒரு நேர்மையான சித்திரத்தை காட்டாமல் ‘அறசீற்றம்’ ‘கலை’ ‘அரசியல்’ போன்ற வார்த்தைகள் உங்கள் ‘விமர்சனத்தில்’ இருப்பதால் மட்டுமே இந்த எதிர்வினை. நீங்கள் அழுது விட்டு வந்த கதையை மட்டும் சொல்லி இருந்தால்….. எம் நேரமும் கொஞ்சம் மின்சாரமும் மிச்சம் ஆகி இருக்கும்!

Advertisements